Thursday, February 2, 2023

இன்று சின்னக்காவின் 25வது நினைவு தினம்

அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 25வது நினைவு தினம்

        அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி

இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 25வது நினைவு தினமாகும். 

சின்னக்காவின் 'அம்பிகை இல்லம்' பல ஆண்டுகளாக மாணவர்கள் வசிக்கும் இடமாகவும், காலத்துக்கு காலம் பாலர் பள்ளியாகவும், தையல் பள்ளியாகவும், ரியூசன் சென்ரர் ஆகவும் இயங்குவதற்கு உதவியதோடு உறுதுணையாகவும் செயற்பட்டார்.

அம்பிகை இல்லத்தில் வசித்த மாணவர்கள் இடையூறற்ற ஆதரவான சூழலில் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது, அதே சமயம் பாலர் பள்ளி இளம் வயதிலேயே குழந்தைகளுக்கு கல்வியறிவை விளையாட்டோடு வளர்த்து ஊக்கமளிக்கும் சூழலை வழங்கியது. தையல் பள்ளி இளைஞர்களுக்கு மதிப்புமிக்க திறன்களைக் கற்பித்தது, மேலும் கல்வி மையம் மாணவ சமூகத்திற்கு பரந்த அளவிலான வகுப்புகள் மற்றும் பட்டறைகளை வழங்கியதன் மூலம் அவர்களின் திறமைகளை மேம்படுத்த, செப்பனிட உதவியது. 

 'அம்பிகை இல்லம்' வெறுமனே கல்வி கற்கும் இடமாக மட்டுமல்லாமல் நட்பும், நகைச்சுவையும், உறுதுணையும் நிறைந்த சூழலில் மாணவர்கள் சுதந்திரமாக விளையாட்டோடு விளையாட்டாக தங்கள் திறன்களை வளர்க்குமிடமாக இருப்பதற்கு மிகவும் ஆதரவாக இருந்தார். ஒற்றை வரியில் சொல்லின் "அம்பிகை இல்லம் வந்தோரில் பாலர்கள், மாணவர்கள், ஆசிரியர்களென சின்னக்காவின் அன்பும் வாஞ்சையும் நிறைந்த பழஞ்சோற்றுக் குழையலின் சுவையறியார் யார்?".

நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சி, குறிப்பாக செயற்கை அறிவு  (Artificial Intelligence)  தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவி உறுதுணையாக ஒன்றிணைந்து கூடிக் கல்வி கற்கும், செயற்திறன்களை வளர்க்கும் சூழலை சீர்குலைக்குமா?  என்கின்ற விவாதங்களை மனிதர்களிடையே எழுப்பியுள்ள நிலையில், சின்னக்காவின் அர்ப்பணிப்பு நிறைந்த வாழ்க்கையை எங்களால் மறக்கமுடியுமா?

உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும், நாங்கள் சின்னக்காவை அன்புடன் நினைவு கூருகின்றோம்.

அன்புடன்
சாதாரணன்

Wednesday, January 25, 2023

ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!!

 ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!!  

இன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2023) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக் கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 

Short Short News : Australia Day

இந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை,   தென் ஆஸ்திரேலிய மாநிலத்தின் தலைநகர் அடிலெய்ட் நகரத்தைச் சேர்ந்தவருமான ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்,  மிக முதன்மையாக மனிதர்கள் குறிப்பாகப் பெண்கள் தங்கள் உருவமைப்புப் பற்றிய சமூக எதிர்மறை மதிப்பீடுகளை சவாலாக எதிர்கொண்டு யாரும் தங்கள் உருவமைப்பை விரும்ப வேண்டும் என்கின்ற சுய அதிகாரத்தை வழங்கும்  'Body Image Movement' இயக்கத்தின் நிறுவனரும்,  முன்னின்று வழி நடாத்துபவருமான  Taryn Brumfitt அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.

Prime Minister Anthony Albanese and Australia of the year Taryn Brumfitt

இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.


தெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.


எல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!.


அன்புடன்

சாதாரணன்


இப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.

ஆஸ்திரேலியா தினவிபரங்கள்

http://www.australiaday.org.au/

ஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள்

http://www.australianoftheyear.org.au/

இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும்   அவர்களின் விபரங்கள்

https://australianoftheyear.org.au/recipients/taryn-brumfitt