அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 24வது நினைவு தினம்
அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி
|
இன்று அம்பிகை இல்லத்தின் நாயகி 'சின்னக்கா', அமரர் சின்னத்தம்பி நாகேஸ்வரி அவர்களின் 24வது நினைவு தினமாகும்.
நாங்கள் அம்பிகை இல்லத்தில் வசித்த நாட்களில், இன்றைய நாட்களில் பேசுபொருள் ஆகியிருக்கும் இயற்கையோடு ஒன்றிணைந்த உணவுமுறையை கைப்பிடிப்பதில் சின்னக்கா முதன்மையானவராயிருந்தார். அம்பிகை இல்லத்தைச் சுற்றிய வளவுக்குள் கறிமுருங்கை, தூதுவளை, சுண்டங்கத்தரிக்காய், அரைநெல்லி, கறிவேப்பிலை, பப்பாளி, பனை, தென்னை, வேம்பு என மரங்கள் வளர்ந்திருந்தன. கிணற்றடியில் வல்லாரையும், பொன்னாங்காணியும் படர்ந்திருந்தன. இவை தவிர வேலியில் வாதநிவாரணி மரத்துடன் ஒன்றிணைந்து முசுட்டை, குறிஞ்சா, முடக்கொத்தான் கொடிகள் படர்ந்திருந்தன.
இந்தச் செடி, கொடி, மரங்களைப் பராமரிப்பதிலும், பயன்படுத்துவதிலும் சின்னக்கா விசேட கவனமெடுப்பார். இவைகளின் இலை, காய், பூக்களை சின்னக்கா, எங்கள் தினசரி உணவில் சுண்டங்காய்க் கறி, வாதநிவாரணி வறை, வல்லாரை, தூதுவளைச் சம்பல், நெல்லிக்காய் ஊறுகாய், வேப்பம்பூ வடகம், முடக்கொத்தான் இரசம், முசுட்டைச் சொதி, ஒடியல் கூழ் எனப் பல வடிவங்களில் விசேட உணவாக்கி இரண்டறக் கலந்துவிடுவார்.
அன்றைய பால்யத்தில் எங்களுக்கு இவை கைப்பாகவும், உவர்ப்பாகவும் இருந்தாலும் இன்றைய உடல் ஆரோக்கியத்திற்கு அத்திவாரமாகி விட்டதால் சின்னக்காவின் உணவு முறையை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
உலகெங்கும் பரந்து வாழும் சின்னக்காவின் உறவுகள் அனைவர் சார்பாகவும், நாங்கள் சின்னக்காவை அன்புடன் நினைவு கூருகின்றோம்.
அன்புடன்
சாதாரணன்