Saturday, December 30, 2017

அளவெட்டி அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள் (முன்னாள் பாராளுமன்ற நேரடிஉரைபெயர்ப்பாளர்) இன்று (30/12/2017) காலமானார்.

அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள்

அமரர். செல்லையா குமாரசாமி அவர்கள், மனிதன் சந்திரனில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்த, அப்பலோ 11 நிலவுப் பயணத்தை, இலங்கை வானொலி நேரடி வர்ணனையாக ஒலிபரப்பியபோது நேரடி ஒலிபரப்பாளராக செயற்பட்ட பெருமை இவரைச் சாரும். மற்றும் இலங்கை அரசுக்கும், தமிழ் கட்சிகள் இடையில் பூட்டானில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது மொழிபெயர்பாளராகவும் செயற்பட்டவர். இதனால் ஊர்மக்களால் ‘அப்பலோ’ என்றும், பூட்டான் என்றும் செல்லமாக அழைக்கப்படுபவர்.

குமாரசாமி அத்தான், சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, வட்டுகோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, ஆகியவற்றின் பழைய மாணவராவார். கல்லூரிக் காலத்தில் தீவிர கடவுள் மறுப்புக் கொள்கையாளராக இருந்து பின்னர் ஆன்மிகத்தில் பற்றுக் கொண்டவராக இருந்தார். அத்தானின் வீடு பழைய 'THE HINDU' பேப்பர் கட்டுகளால் நிறைந்திருக்கும். மொத்தத்தில் அவர் ஒரு பல்துறை சார்ந்த அறிவாளியாகத் திகழ்ந்தார்.

குமாரசாமி அத்தான், ஒரு காலத்தில் தீவிர மார்க்சீயவாதியாக இருந்து பின்னர் தடித்த தமிழரசுக் கட்சி ஆதரவாளராக மாறியவர். இன்னும் சொல்லப்போனால் அமரர் வ. பொன்னம்பலம் (வி.பி) அவர்களுக்கு கம்யூனிஸம் சொல்லிக் கொடுத்தவர் (அவர் வாயால் கூறியது) ; அமரர் தந்தை S.J.V. செல்வநாயகம் அவர்களின் பிரத்தியேக செயலாளராக பணிபுரிந்தவர். பிரச்சனைகளின் மத்தியில் நடந்த இவரது காதல் கல்யாணத்திற்கு, மாவிட்டபுரம் முருகன் கோயிலில் தந்தை செல்வா அவர்கள் முதன்மை விருந்தினராக வந்து தனக்காக காத்திருந்து சிறப்பாக நடாத்தி வைத்ததை என்றுமே பெருமையாகக் கூறிக் கொள்வார்.
குமாரசாமி அத்தானும், சிந்தாமணி அக்காவும்
அமரர், சிந்தாமணி அக்காவைக் காதல் திருமணம் புரிந்ததால், இவருடன் மிகவும் நெருங்கிப் பழகும் பெரும் பாக்கியம் எனக்கு வாய்ப்பாக‌க் கிடைத்தது. அக்கா, அத்தான், இருவரினதும் புரிதலையும், நெருங்கிய ஒற்றுமையையும் அருகில் கண்டு மிகவும் அதிசயித்துமிருக்கின்றேன். இருவரும் ஒரே ஆண்டில் காலமானது, மனதுக்கு சற்று ஆறுதலைத் தருகின்றது. இருவரினதும் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

அன்புடன்
சாதாரணன்

No comments:

Post a Comment