யாழ்ப்பாணம் என்றால் படிப்பு, படிப்பென்றால் யாழ்ப்பாணம் என்றிருந்த பொற்காலமது. இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து மாணவர்கள் யாழ்ப்பாணம் வந்து படித்த காலமது. யாழ்ப்பாணத்து பள்ளிக்கூடங்களின் விடுதிகள் எல்லாம், மலையகம், மட்டக்களப்பு, திருகோணமலையென வெளி மாவட்ட மாணவர்களால் நிரம்பியிருந்த காலம். அப்படி என்னையும், கூப்பனையும் (ரேஷன் கார்டு) கொடுத்து, கொண்டுவந்து விட்ட இடம்தான் அளவெட்டி. உண்மையில் கொழும்பின் கட்டிடகாட்டினிடையே என் வாழ்வு முடங்கிவிடாமல், நல்ல விட்டு, வீராத்தியாக உலாவி, படிப்பிலும் கெட்டித்தனம் காட்டி அளவெட்டியில் நான் வளர்ந்தேன்.
[caption id="attachment_431" align="aligncenter" width="450"] கெப்பிட்டல் தியேட்டர் கொழும்பு[/caption]
இனி என்ரை சினிமாவுக்கு வருவம். உங்களுக்குத் தெரியும்தானே அந்தக்காலத்தில் கொழும்பு போன்ற நகரங்களில் வாழ்ந்தவர்களுக்கு சினிமாவுக்குப் போறதெண்டால், நாங்கள் ஊரிலை திருவிழாக்குப் போறமாதிரி, அப்பிடி என்ரை அப்பா, அம்மாவும் நல்ல சோக்கா, டிப்டொப்பா வெளிக்கிட்டு, தம்பியையும் (என்னை) தூக்கிக்கொண்டு வந்து, பப்படவத்தையும், பஞ்சிகாவத்தை ரோட்டும் சந்திக்கிற முக்கிலையிருந்த சுந்தரராஜன் அண்ணையின்ரை பெட்டிக்கடையிலை சோடாவும் வாங்கிக் குடிச்சிட்டு, கெப்பிட்டல் தியேட்டருக்குப் படம் பார்க்கப் போகேக்கை, அவையளுக்குத் தெரியாது தம்பியும் தியேட்டரிலை இன்னுமொரு படம் காட்டப்போறான் எண்டு.
என்ரை படக்கதை இதுதான். என்ரை படம் பெல் அடிக்கமுதலே கேள்விக்கணைகளோடு தொடங்கிவிடும்.
இதேன் அங்கை பெரியசீலையாலை மூடியிருக்கினம்?
அங்கை ஆக்கள் நடிக்கப்போகினம்.
இப்ப ஆக்கள் அங்கையிருக்கினமே?
பெடி கிட்டப்போய்ப் பார்க்கப்போகுதேயென்ற பயத்திலை,
இல்லை. பெல் அடிக்கத்தான் வருவினம்.
எப்பிடி, எதுக்குள்ளாலை, வருவினம்?
மேலாலை, ஏணி வைச்சு இறங்கி வருவினம்.
இப்பிடி, என்ரை கேள்விகள், படம் தொடங்கின பிறகும் விடாமல் தொடரும்.
ஏன் நாங்கள் எல்லாரும் இருட்டுக்குள்ளையிருக்க அவையள் மட்டும் வெளிச்சத்திலை படம் நடிக்கினம்?
இங்கையிருக்கிற எல்லாருக்கும் அவையளிலை நல்ல விருப்பம். எல்லாருக்கும் நல்லாத் தெரியவேணுமெண்டுதான் வெளிச்சத்திலை படம் நடிக்கினம்.
அப்பிடியே உவையளிலை எனக்கு விருப்பமில்லை. நாகேஷிலைதான் விருப்பம். அவர் எப்ப வருவாரம்மா?
இப்ப வந்திடுவார். கொஞ்சம் சத்தம் போடாமல் இருக்கிறீங்களே!
இனி அடிதான் விழுமெண்ட பயத்திலை. தம்பி கேள்வி கேட்கிறதை விட்டுட்டு கொஞ்சநேர ஆராய்ச்சிக்குப்பிறகு,
அப்போதை அந்த ஓட்டைக்குள்ளாலை வெளிச்சம் வந்தது. இப்ப இந்த ஓட்டைகுள்ளாலையெல்லோ அம்மா வெளிச்சம் வருகுது ஏனம்மா? எண்டு தொடரும். இதுபோல விளங்கப்படுத்த ஏலாத என்ரை கேள்விகளுக்கெல்லாம் நல்ல கிள்ளுத்தான் விளக்கமாக கிடைக்கும். கிள்ளுத்தந்த நோவிலை அழுது அசரப்போகும் என்னை நாகேஷ் வந்துதான் உஷாராக்குவார்.
வந்த நாகேஷ் போறவரைக்கும் துள்ளிக் குதிச்சுப் படம் பாக்கிற நான். நாகேஷ் போனபிறகு
இனி எப்ப நாகேஷ் வருவார்? என்றபடிக்குத் தொடரும்.
படமும் கிளைமாக்ஸை நெருங்க, என்ரை படமும் உச்சக்கட்டத்தையடைந்து இனி நாகேஷ் வரவே மாட்டாரா? என்று கேட்டு தமிழ்ப்படங்களின் ஓட்டத்தை துரிதப்படுத்த உதவிவிட்டு இடைநடுவில் காணாமல் போகும் காமெடியன்களைப் பற்றிக் கவலைப் படத்தொடங்கி விடாமல் ஒரே கேள்வியை திரும்பத், திரும்பக் கேட்கத் தொடங்கிவிடுவேன்.
இவன் தன்ரை படத்தை எல்லாருக்கும் காட்ட வேணுமெண்டுதான் முடிவுகட்டி தியேட்டருக்கே வந்திருக்கிறான் எண்டு சொல்லி சனமெல்லாம் அப்பா, அம்மாவை பார்த்து முறைக்கத் தொடங்கிவிடும்.அப்பாவும், அம்மாவிடம் நீயிருந்து படத்தைப்பார். நான் இவன்ரை படத்திற்கு ஒரு முடிவு கட்டியிட்டு வாறன். எண்டு சொல்லிக் தியேட்டருக்கு வெளியிலை கூட்டிக்கொண்டு வந்து யாருமே எதிர்பார்க்காத கிளைமாக்ஸாக பெப்பமின்ற் (கற்பூர இனிப்பு) வாங்கித் தருவார். இதுக்கு மேலையும் இழுத்தால் சனம் இரசிக்காது என்று தெரிந்து நானும் படத்தை முடித்துவிடுவேன்.
இப்பிடி சினிமாவைப் பகுத்தாராய்ந்து பார்த்து வளர்ந்ததினால் வந்த வளர்ச்சி. எனக்குப் பிடித்த தமிழ்ப்படங்களின் பட்டியலை இப்படி தக்கவைத்து, இன்றுவரை தொடர்கிறது.
உதிரிப்பூக்கள், அழியாதகோலங்கள், அவள் அப்படித்தான், என நீளும் பட்டியலில் சமீபத்தில் நந்தலாலா........இன்னும் கிட்டத்தில் அட்டகத்தியும்.....மேலும் நடுவுல கொஞ்சம்.......
ஆனா பாருங்கோ, அங்கையிழுத்து, இங்கையிழுத்து, கடைசியிலை இப்ப எங்கை கொண்டுவந்து விட்டிருக்குதெண்டால் அதுவும் ஊடகத்திலைதானே. தியேட்டரிலை பார்த்த சினிமாவை, இண்டைக்கு வீட்டிலை வீடியோ, டிவிடி, யூடியூப்பிலை எண்டு பார்கிறதிலை தொடரத்தானே செய்யுது.
அன்புடன்
சாதாரணன்.
அடுத்த வெளியீடு : அம்பிகை இல்லம், அளவெட்டி வடக்கு, அளவெட்டி.
-அப்ப பின்னை, நேரமிருக்கேக்கை பேந்தும் வாங்கோவன்-
No comments:
Post a Comment